Sunday, July 8, 2012

HISTORY OF NETHAJI

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 - ஆகஸ்ட் 18 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது.

சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் - கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.

'ஜெய் ஹிந்த் ' என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய் சிலிர்த்துவிடும். அந்த முழக்கத்தை நாட்டிற்கு அளித்த மிகப்பெரும் புரட்சியாளரான சுபாஷ் சந்திர போஸ் பற்றி நினைத்தாலோ ஒவ்வொரு இந்தியனின் உடல் முறுக்கேறி இதயம் வீரத்தாலும் நாட்டுப்பற்றாலும் இந்த உலகையே வெல்லும் உறுதி படைத்ததாகிவிடும். 'எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் ' என்றும் 'சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் வாழ விரும்பினால் நம்மால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. நமக்கு முன்னால் ஒரு நீண்ட போராட்டம் இன்னும் இருக்கிறது. இந்தியாவை வாழ வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரே ஒரு விருப்பம் மட்டும் தான் இருக்க வேண்டும். அது நாட்டிற்காக நம் உயிரையே விடுவது தான் ' என்று எந்த வித போலித்தனமும் அரசியல் உள்நோக்கமும் தன்னலமும் இல்லாமல் நாட்டின் விடுதலையே குறிக்கோளாகக் கொண்டு அறைகூவல் விடுத்து மக்களை தட்டியெழுப்பியவராயிற்றே.

மர்மம் நிறைந்த அவரது மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இன்றைய தேதி வரை அவரது மரணம் குறித்த எந்த ஒரு ஸ்திரமான முடிவுக்கும் வர இயலாமல் இருக்கிறது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதிஅவர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கியபோது தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த ஜப்பானிய டாக்டரான யோஷிமி தமயோஷி கொடுத்த வாக்குமூலத்தின் படி அன்று இரவே போஸ் இறந்து விட்டார் என்று அறியப்படுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பதை பலரும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். காந்திஜியோ ' இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் நேதாஜி எப்படி இறப்பார் ' என்ற அதீத நம்பிக்கையோடு இருந்தார். நேதாஜி ஏதோ ஒரு காரணத்திற்காக எங்கோ தலைமறைவாக இருக்கிறார் என்றும் தக்க தருணத்தில் தாய் நாட்டிற்குச் சேவை செய்ய மீண்டும் வருவார் என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். நேதாஜியின் மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் அமைத்த முதல் நபர் வைஸ்ராய் வேவல். அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியிடவில்லையென்றாலும் அந்த விசாரணையில் போஸ் இறந்து விட்டார் என்றே நம்பப் பட்டதாகத் தெரிகிறது.

இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான முதல் விசாரணைக் கமிஷன் அப்போது இரயில்வே மந்திரியாக இருந்த ஷா நவாஸ் கான் தலைமையில் நிறுவப்பட்டது. ஆனால் அதிக விசாரணை எதுவுமின்றி துரிதமாக நேதாஜி இறந்த செய்தியை ஷா ஊர்ஜிதப்படுத்தினார். அவசரத்தில் அள்ளித் தெளித்த இந்த கோலத்தால் ஷா INAவில் நேதாஜிக்கு அடுத்த கட்ட தலைவராக இருந்திருந்த போதும், அவர் ஒரு சிறந்த போர்வீரராக இருந்த போதும், அவருடைய விசாரணைத் திறனைப் பலரும் சந்தேகித்தனர். பிறகு இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது ஜி.டி.கோஸ்லாவின் தலைமையில் இன்னொரு விசாரணைக்கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் சிங்கப்பூர், பேங்க்காக், ரங்கூன் ஆகிய நாடுகளுக்குச் சென்று பலரைப் பேட்டி கண்டது. ஆனால் ஜி.டி.கோஸ்லா நேதாஜி இறந்த இடமான ஃபோர்மோசா என்ற இடத்துக்குச் செல்லாமலேயே அறிக்கையை சமர்ப்பித்ததால் அவ்விசாரணைக் குழுவையும் யாரும் நம்பவில்லை. மேலும் நேதாஜிக்கும் கோஸ்லாவிற்கும் இடையில் இணக்கமான நட்பு இருந்ததில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த விசாரணைக்கமிஷனின் அறிக்கை நம்பகத் தன்மையை இழந்ததற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. அது கோஸ்லாவிற்கும் பண்டிட் நேருவின் குடும்பத்திற்குமிடையேயான மிக நெருங்கிய நட்புறவு. நேதாஜியின் கடைசிக் காலத்தில் நேதாஜியும் நேருவும் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம். கோஸ்லாவின் அறிக்கையும் நேதாஜி இறந்த விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தியது. ஆனால் அதற்கு முக்கிய ஆதாரமாக டாக்டர் யோஷிமி தமயோஷியின் மருத்துவ அறிக்கையே சுட்டப்பட்டது. கோஸ்லாவின் அறிக்கை மொரார்ஜி தேசாய் உட்பட பலராலும் நிராகரிக்கப்பட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாம் முறையாக ஜஸ்டிஸ் ஜே.சி.முகர்ஜியின் தலைமையில் ஒரு விசாரணைக்கமிஷன் நிறுவப்பட்டது. இன்றைக்கும் இந்த கமிஷன் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. இந்த முறையாவது உண்மையை வெளிக்கொணர்வார்கள் என நம்புவோம்.

1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பிறந்த சுபாஷ் சந்திர போஸ் இள வயதில் விளையாட்டில் ஆர்வமின்றி மிகுந்த சங்கோஜியாக இருந்தார். கட்டாக்கில் (இன்றைய ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள பகுதி) பிறந்த போஸ், பூரி என்ற புண்ணியஸ்தலத்திற்கு வரும் சாதுக்களாலும் யாத்திரிகர்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டார். தனது பதினைந்தாவது வயதில் விவேகானந்தருடைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் படித்தவர் ராமகிருஷ்ண பரமஹம்ஸராலும் மிகவும் ஈர்க்கப்பட்டார். மிகுந்த மதிநுட்பமுள்ளவரான போஸ் பள்ளியிறுதி ஆண்டில் இரண்டாவதாக வந்து கொல்கத்தாவிலுள்ள பிரெஸிடென்ஸி கல்லூரியில் சேர்ந்தார்.

1916ம் ஆண்டு ஆங்கில விரிவுரையாளரான ப்ரொஃபஸர் ஓட்டன் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் அவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டு தத்துவத்தில் முதன்மையாகத் தேர்வு பெற்றார். அவருடைய புத்தி கூர்மையைப் புரிந்து கொண்ட அவரது தந்தையார் அவரை அரசாங்க உத்யோகத்தில் உயர் பதவியில் பார்க்க ஆசைப்பட்டு சிவில் செர்விசீல் தேர்ச்சி பெற இங்கிலாந்து அனுப்பி வைத்தார். 1920ம் ஆண்டு ஆங்கிலத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மிகச்சிறப்பாக அதில் போஸ் தேர்ச்சி பெற்றார். ஆனால் அதே சமயம் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்துவிட போஸ் மன அமைதி இழந்தார். ICSல் தேர்ச்சி பெற்றாலும் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்ய மறுத்து விட்டார். அந்த நேரம் காந்திஜி ஒரு மக்கள் தலைவராக உருவெடுத்த நேரம். சுபாஷ் சந்திர போஸ் இந்தியன் நேஷனல் காங்கிரஸில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்றும் பொருட்டு காந்திஜியை சந்தித்தார். போஸின் பணிவான கோரிக்கையைக் கேட்டு காந்திஜி அவரை கொல்கத்தாவிலிருந்த தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸிடம் அனுப்பி வைத்தார். 1921 முதல் 1925 வரைக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தில் கொல்கத்தாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடந்த அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றார். 1921ல் ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸின் இந்திய வருகையை புறக்கணிக்கும் போராட்டத்தை வழிநடத்தியதால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் இன்னொரு முறை தேஷ் பந்துவுடன் சிறை சென்றார். அப்போது தேஷ் பந்துவை பிற்காலத்தில் குருவாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு நேதாஜிக்குக் கிடைத்தது. தேஷ் பந்து கொல்கத்தாவின் மேயராகியவுடன் போஸ் முதன்மை ஆட்சித்துறை அதிகாரியாக பதவியேற்றார். பதவியில் இருந்து கொண்டே பல புரட்சியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அதனால் அரசாங்கம் அவரை மறுபடியும் கைது செய்து முதலில் அலிப்பூர் ஜெயிலிலும் பின்னர் பர்மாவிலுள்ள மாண்டலே ஜெயிலிலும் அடைத்தார்கள். இந்த சிறையடைப்பு அவருக்கு, எதிர்கால நடவடிக்கைகளைப் பற்றியும் புரட்சியை நெறிப்படுத்துதலைப் பற்றியும் சிந்திக்க, வேண்டிய அவகாசம் கொடுத்தது. 1925ல் தேஷ் பந்துவின் மறைவு அவரை நிலைகுலைய வைத்தது. ஆனால் மாண்டலேயில் இருந்த இரண்டு வருடங்கள் அவருக்கு வேண்டிய ஊக்கத்தையும் மனபலத்தையும் கொடுத்தது. 1926ம் ஆண்டு முடிவில் வங்காள சட்ட சபைக்கு வேட்ப்பாளராக நியமனம் பெற்றார். மே 1927ல் அவரது உடல்நலம் கருதி அவரை சிறையிலிருந்து விடுவித்தார்கள். டிசம்பர் 1927ம் ஆண்டு ஜவஹர்லாலுடன் காங்கிரஸின் ஜெனரல் செக்ரட்டரி பதவியை ஏற்றார். பின்னர் 1928ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த சுயாட்சி நாடாக இந்தியாவை அங்கீகரிக்க வேண்டி நிகழ்ச்சி நிரலை மோதிலால் நேரு முன் வைத்தார். இதனை இளைய தலைவர்கள் எதிர்த்தார்கள். ஜவஹர்லாலும் போஸும் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கோரிப் போராடவேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டியின் கட்டம் கட்டமாக சுதந்திரம் பெறும் பிரேரணைத்திட்டத்தை ஒத்துக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டார்கள். அப்போது காந்திஜி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு காலக் கெடு கொடுக்கலாம் என்று ஒரு யோசனையை முன்வைத்தார். அதன் படி ஒரு வருடத்திற்குள் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சார்ந்த சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்கத் தவறினால் காந்திஜியே முன்னின்று முழு சுதந்திரத்திற்கான சட்ட மூலத்தை தயாரித்தளிப்பார் என்றும் யோசனை வழங்கப்பட்டது. இந்த யோசனையை எல்லோரும் அங்கீகரித்தார்கள்.

ஆனால் எவ்வளவோ முயன்றும் சுயாட்சி அந்தஸ்த்து பெறமுடியவில்லை. அதன் விளைவாக அடுத்த காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் முழு சுதந்திரம் (பூர்ண ஸ்வராஜ்) வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு நேதாஜி பல முறை சிறை சென்று வந்தார். 1930ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரை ஊர்வலம் நடத்திய குற்றத்திற்காக மறுபடி சிறையிலடைத்த பிறகு அந்த செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். அவர் இம்முறை சிறையில் இருந்த போது கொல்கத்தாவின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு (1930 மார்ச்சில்) ஷஹீத் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரஸிடம் மிகுந்த வருத்தமும் கோபமும் கொண்டிருந்தார். பகத் சிங்கின் மறைவும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாத காங்கிரஸ் தலைவர்களின் கையாலாகத்தனமும் அவரை வெகுண்டெழச் செய்தது. பகத் சிங்கின் தூக்கிலிடல் முதன் முதலாக அஹிம்சா முறையிலான போராட்டத்தில் அவரை நம்பிக்கையிழக்கச் செய்து, தற்காப்புக்கு சிறந்த வழி தாக்குதலை முதலில் தொடங்குவது தான் என்று நம்ப வைத்தது. 1932ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அப்போது வியன்னாவுக்குச் சென்றவர் வித்தல்தாஸ் படேல் என்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைச் சந்தித்து அவரால் மிகவும் கவரப்பட்டார். இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்தது. இருவருமே ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடக்கூடாது என்று கருதினர். ஆனால் அது ஆயுதமேந்திய போராட்டத்துடன் நடைபெற வேண்டும். அப்போராட்டம் எல்லா பக்கங்களிலிருந்தும் தொடுக்கப்பட வேண்டும் என்றும் நம்பினர். அதனுடன் பிரிட்டிஷுக்கு எதிரான நாடுகளுடன் ஒன்றிணைந்து போராடினால் தான் வெற்றிக்கு வழி வகுக்க முடியும் என்பதையும் புரிந்து கொண்டனர்.

1933ம் ஆண்டு வித்தல்தாஸின் மறைவுக்குப் பிறகு போஸின் ஒரே குறிக்கோள் மற்ற நாட்டவர்களிடம் இந்திய மக்கள் படும் துன்பங்களையும் சுதந்திரத்திற்கான நியாயங்களையும் பரப்புவதே. 1934ம் ஆண்டு நவம்பர் மாதம் 'The Indian Struggle ' என்ற புத்தகத்தை எழுதி பதிப்பித்தார். 1932 முதல் 1936ம் ஆண்டுக்கு இடைப்பட்டக் காலகட்டத்தில் ஜெர்மனியின் ஃபெல்டர் (ஹிட்லரையும் சந்தித்ததாக ஒரு கூற்று இருக்கிறது), இத்தாலியின் முஸ்ஸோலினி, ஐயர்லாந்தின் டி வலேரா, ஃப்ரான்ஸின் ரோமா ரோல்லண்ட் ஆகியோரைச் சந்தித்தார். ஐயர்லாந்தின் டி வலேராவால் கவரப்பட்டு பின்னர் தன்னுடைய புரட்சியின் வடிவத்தை ஐரிஷ் புரட்சிக் குழுவான ஸின் ஃபைன் (Sinn Fein)ஐ மாதிரியாகக் கொண்டு அமைத்தார். 1936ம் ஆண்டு நாடு திரும்பியவரை மீண்டும் கைது செய்து 1937ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலை செய்தார்கள். இதற்கிடையில் சுபாஷ் சந்திர போஸ் நாடறிந்த புகழ் வாய்ந்த தலைவராக உருவெடுத்துவிட்டார். காந்திஜியே அவரைக் காங்கிரஸுக்கு பிரெஸிடெண்ட்டாக தலைமை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பை ஏற்று ஹரிப்பூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். அப்போது ஷாந்தி நிகேதனில் ரபீந்திரநாத் தாகூரால் 'தேஷ் நாயக் ' என்று பட்டமளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

நேதாஜி முஸ்ஸோலினியை சந்தித்ததை வைஸ்ராய் விரும்பவில்லை என்பதை காந்திஜி அறிந்து கொண்டார். காந்திஜியின் எண்ணப்படி சுதந்திரம் பேச்சு வார்த்தைகள் மூலமே பெறக்கூடிய ஒன்று. அதனால் இந்தியன் நேஷனலின் அடுத்த தேர்தலில் நேதாஜி மறுபடியும் போட்டியிட்ட போது காந்திஜி அவரை ஆதரிக்காதது மட்டுமின்றி அவருக்கு எதிராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் ஜவஹர்லால் நேரு இருவரையும் போட்டியிடுமாறு பணித்தார். ஆனால் இருவருமே மறுத்துவிட்டதால் சீதாராமையாவை நிறுத்தினார். தேர்தலின் முடிவுகளோ காந்திஜிக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. அவர் மிகவும் கோபமடைந்து 'இதை எனது தனிப்பட்ட தோல்வியாகவே நான் கருதுகிறேன் ' என்று அறிக்கை விட்டார். அதன் பிறகு காந்திஜி ராஜ்கோட்டுக்குச் சென்று தனது உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். கடைசியில் கொல்கத்தா கூட்டத்தில் நேதாஜியை காங்கிரஸில் இருந்து மூன்று வருடங்கள் தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. இத்தடைக்கான முடிவு நேதாஜிக்கு நேரு மற்றும் தாகூர் ஆகியோரது ஆதரவு இருந்தும் எடுக்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் மூள, போஸ் எதிர்ப்பார்த்தபடி பிரிட்டிஷ் வைஸ்ராய் இந்தியத் தலைவர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல் இந்தியாவை உலகப்போரில் பங்கு கொள்ளும் நாடு என்று அறிவித்து விட்டார். அதை எதிர்த்து ஆட்சியில் இருந்த எல்லா காங்கிரஸ் அரசுகளும் ராஜினாமா செய்துவிட்டன. இதையடுத்து 1940ம் ஆண்டு போஸ் சாவர்கரை பாம்பேயில் சந்தித்த போது அவர் போஸிடம் சிறு சிறு காரணங்களுக்காகப் போராடிச் சிறை சென்று பெருமதிப்புள்ள நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ஜப்பானில் இருந்த ராஷ் பெஹாரி போஸின் அறிவுரைப்படி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவை விட்டு யாரும் அறியா வண்ணம் ஜப்பானுக்கோ அல்லது ஜெர்மனிக்கோ சென்று விடவேண்டும் என்றும் அங்கிருந்து கொண்டு இந்திய போர்க் கைதிகளை ஒருங்கிணைத்து ஒரு ராணுவத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறினார். (ராணுவத்தை அமைக்கும்படி சாவர்கர் அறிவுருத்தியதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை). ஆனால் நேதாஜியோ இந்தியாவை விட்டுச் செல்லாமல் அப்பாவி இந்திய வீரர்களை போரில் ஈடுபடுத்துவதைக் கண்டித்தும் இந்திய மக்களின் வரிப்பணத்தையும் மற்ற செல்வங்களையும் போருக்காக செலவழிப்பதைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்திற்கு மக்களின் பேராதரவும் இருந்தது. இதனால் பயந்த ஆங்கிலேய அரசு அவரை மீண்டும் சிறையிலடைத்தது. இதை எதிர்த்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட நேதாஜியின் உடல்நலம் உண்ணாவிரதத்தின் 11வது நாள் அன்று மோசமடைந்தது. சிறையில் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் மக்கள் பொங்கி எழுந்து விடுவார்கள் என்று உணர்ந்த பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டுக்காவலுக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பித்தது. போஸ் 1941ம் வருடம் ஒரு முஸ்லீம் மத போதகரைப்போல் வேடமணிந்து அவ்வீட்டுக்காவலில் இருந்து தப்பினார். பின்பு காபூலில் தென்பட்ட அவர் மீண்டும் தலைமறைவாகி, 'ஆர்லேண்டோ மஸ்ஸோட்டா ' என்ற பெயரில் போலி ஆவணங்களுடன் முதலில் ரஷ்யாவிற்குச் சென்றவர் மார்ச் 28ம் தேதி பெர்லினை அடைந்தார்.

ஜெர்மனியின் உதவியோடு ஒரு ராணுவப்பிரிவை ஏற்படுத்தியவர் ஒரு வானொலி நிலையத்தையும் நிறுவி, அவ்வானொலி வழி இந்தியர்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு தூண்டினார். நேதாஜி தப்பியோடி பெர்லினிலிருந்து வானொலி மூலம் ஒலிபரப்பியது மக்களை மிகவும் ஆவேசத்துடன் போராட ஊக்குவித்தது. பிறகு ரோமிலும் பாரீஸிலும் இந்திய மையங்களை நிறுவினார். அப்போது ராஷ் பெஹாரி போஸ் மற்ற தேசபக்தர்களின் துணையோடு இந்தியப் போர்க்கைதிகளைக் கொண்டு ஒரு ராணுவம் அமைத்து விட்டதாகவும் அதைத் தலைமை தாங்கி இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் படையுடன் மோதுமாறும் அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று ஒரு ஜெர்மானிய கப்பலில் மிக ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்தடைந்தார். அங்கு வந்தவர் ராணுவத்திற்குத் தலைமை ஏற்றார்.

பின்னர் ஜப்பானியர்களின் உதவியோடு ஒரு தற்காலிக இந்திய அரசை அமைத்து, அந்த ராணுவத்திற்கு இந்தியன் நேஷனல் ஆர்மி என்ற பெயரையும் சூட்டினார். மந்திரி சபை ஒன்றை அமைத்துக் கிழக்கில் வாழும் இந்தியர்களிடமிருந்தும் ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்தும் நிதியுதவி பெற்று அரசாங்கத்தையும் ராணுவத்தையும் நடத்தினார். ஜப்பானிய அரசு அவருக்கு 11 இருக்கைகள் கொண்ட ஒரு விமானத்தையும் கொடுத்து உதவியது. மகளிர் ராணுவத்தையும் நிறுவி அதற்கு ராணி ஜான்ஸி ரெஜிமெண்ட் என்று பெயர் சூட்டினார். அந்த இரு ராணுவப்படைகளையும் கொண்டு இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் துருப்புகளை விரட்டியடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் அவர் விருப்பத்திற்கு பேரிடியாகப் போரில் ஜப்பான் வீழ்ச்சியடைந்தது. அதனால் INAவைச் சேர்ந்த வீரர்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானியர்கள் சரணடைவதற்கானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த போது INAவின் எதிர்காலம் குறித்துப் பேசுவதற்காக நேதாஜி ஜப்பான் சென்றார். பேங்க்காக்கிலிருந்து கிளம்பிய விமானம் ஃபோர்மோசா என்ற இடத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் கிளம்பியபோது விபத்து ஏற்பட்டது.

காந்திஜியின் அஹிம்சா வழிக்கு நேர் எதிரான வழியை நேதாஜி பின்பற்றினாலும் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகப் பாசத்துடன் பழகி வந்தனர். ஆனால் காங்கிரஸின் பிரெஸிடெண்ட் தேர்தலில் சீதாராமய்யா தோல்வியுற்றதில் கோபமடைந்த காந்திஜி நேதாஜி தன் பதவியைத் துறக்கக் காரணமாயிருந்து விட்டார். மாகாத்மாவும் சில நேரங்களில் சாதாரண மனிதன் தான் போலும்.

1939ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக நேதாஜி காந்திஜியிடம் ஒரு நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்ட போது, காந்திஜி நாட்டில் பரவலான வன்முறை வெடித்து விடும் என்று காரணம் காட்டி மறுத்து விட்டார். அப்போது நேதாஜியின் நண்பர்கள் அவரே ஏன் அந்தப் போராட்டத்தைத் தொடங்கக்கூடாது என்று வினவ அதற்கு நேதாஜி 'நான் அழைத்தால் 20 லட்சம் மக்கள் என் பின்னே வரக்கூடும். ஆனால் காந்திஜி அழைத்தாலோ 20 கோடி மக்கள் திரண்டு வருவார்கள் ' என்றாராம்.

பின்னர் ஒரு முறை 'நான் எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்று இந்தியாவின் தலைசிறந்த மனிதனான காந்திஜியின் நம்பிக்கையை மட்டும் பெறவில்லையென்றால் அதைவிட மிகப் பெரிய சோகம் வேறொன்றுமில்லை ' என்று கூறினாராம். 1939ம் ஆண்டிற்குப் பிறகு காந்திஜியும் நேதாஜியும் சந்தித்துக்கொள்ளவேயில்லை.



சமீபத்தில் (பிப்ரவரி 2005) ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷனிடம் தாய்வான் அதிகாரிகள் நேதாஜி இறந்ததாகச் சொல்லப்படும் தேதியில் எந்த ஒரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அவர்கள் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தாய்பேயில் நிகழவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இச்செய்தி நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் அவர் மரணத்தில் மர்மம் இருக்கக்கூடும் என்றும் அதனால் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி வருபவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்து இருக்கிறது.


ரஷ்யாவிலும் பிரிட்டனிலும் இருக்கும் ஆவணக்காப்பகத்திலிருந்து இப்போது பல திடுக்கிடும் தகவல்களைச் சேகரித்திருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் கூறி வந்துள்ளபடி நேதாஜி 1945ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்று தெரிய வருகிறது. இத்தகவல்களைத் திரட்டியவர்கள் புராபி ரே, ஹரி வாசுதேவன் மற்றும் ஷோபன்லால் குப்தா ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்கள். இந்த மர்மத்தின் முடிச்சு இன்னும் இறுகும் போலத்தான் இருக்கிறது. அடையாளம் காண முடியாத நபர்களால் இந்த மூன்று ஆராய்ச்சியாளர்களும் மிரட்டப்பட்டதால் அவர்கள் 2004ம் ஆண்டு ஜூன் மாதம் தங்கள் ஆராய்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். பின்னர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை முகர்ஜி கமிஷனிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் அதனால் பத்திரிக்கையாளர்களுக்கு இப்போதைக்கு வெளியிட முடியாது என்றும் மறுத்து விட்டனர்.

இதில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் வெளி வந்திருப்பதாகத் தெரிகிறது :


1. ஜோசெஃப் ஸ்டாலின் தனது பாதுகாப்பு மந்திரியுடனும் வெளியுறவுத்துறை அமைச்சருடனும் நடத்திய ஆலோசனை பற்றியது

2. இந்தியாவில் இருந்த சோவியத் உளவாளி ஒருவர் அனுப்பிய அறிக்கை.

இவை இரண்டுமே 1946ம் ஆண்டு (அதாவது நேதாஜி இறந்து விட்டார் என்று செய்தி வந்து ஒரு வருடத்திற்குப் பிறகு) நடந்திருக்கிறது. ஸ்டாலின் தன் சகாக்களுடன் இந்தியாவில் கம்யூனிசத்தை தழைக்கச் செய்வது பற்றியும் அதில் சுபாஷ் சந்திர போஸின் பங்கு பற்றியுமே ஆலோசனை நடத்தியதாகத் தெரிய வந்திருக்கிறது. மேலும் பிரிட்டிஷ் ஆவணங்கள்படி நேதாஜி சென்ற விமான விபத்து நடப்பதற்கு முதல் நாள் போஸ் சோவியத் நாட்டிற்குத் தப்பிச்செல்ல விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இன்னுமொரு அறிக்கையில் அந்த விமான விபத்தே ஒரு சூழ்ச்சி என்றும் அது திட்டமிடப்பட்டக் கட்டுக்கதை என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு மேலும் ஆதாரமாக ஜப்பானிய நாளிதழ் ஒன்று 1945ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி இதழில் போஸ் டோக்கியோ வழியாக சோவியத் யூனியனுக்குச் செல்வதாக செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ம் தேதி அன்று முகர்ஜி கமிஷன் அந்த மூன்று ஆராய்ச்சியாளர்களை அவர்களிடமுள்ள எல்லா ஆவணங்களையும் அதன் மொழிபெயர்ப்புகளையும் சமர்ப்பிக்குமாறு பணித்தது. இதற்கிடையில் இந்திய உள்துறை அமைச்சு போஸ் உடலை எரித்த சாம்பலைப் பற்றிய ஃபைலையும் அவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கியது பற்றிய ஃபைலையும் கமிஷனிடம் கொடுக்க மறுத்து விட்டது. அந்த ஃபைல்களை வெளியிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி அது மறுத்துவிட்டது. இது நேதாஜியைப் பற்றி வேறெந்த விவரமும் வெளியே வந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு திட்டமிடப்பட்டச் செயல் என்று கூறுகின்றனர். அவரைப் பற்றிய மேல் விவரங்கள் வெளியே தெரிந்து விட்டால், நேதாஜிக்கு நேரு இழைத்த வஞ்சகச் செயல்களும் மக்களுக்குத் தெரிந்துவிடும் என்று சம்பந்தப்பட்டவர்கள் அஞ்சுவதாலேயே சூழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய கோஸ்லா கமிஷனிடம் விசாரணையின் போது அப்போதிருந்த இந்திரா காந்தியின் அரசு நேதாஜி-நேரு சம்பந்தப்பட்டப் பல கோப்புகள் காணாமல் போய்விட்டன என்றும் மற்ற கோப்புகளை அழித்து விட்டார்கள் என்று கூறியிருந்தது. உண்மையில் நேதாஜி சம்பந்தப்பட்ட எல்லாக் கோப்புகளுமே ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது அவரது நேர் கண்காணிப்பில் தான் இருந்தது என்றும் நேருவின் காரியதரிசியாக இருந்த மொஹமத் யூனுஸ் தான் அக்கோப்புக்களை கையாண்டு வந்தார் என்றும் அறியப்படுகிறது.


பிரிட்டிஷ் உளவுத்துறையின் அறிக்கை ஒன்று நேதாஜி ரஷ்யாவிற்குத் தப்பிச் செல்லுமுன் நேருவுக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியதாகக் கூறுகிறது. இதைக் கோஸ்லா கமிஷன் முன்பு ஷ்யாம்லால் ஜெயின் என்பவர் உறுதிபடுத்தியுள்ளார். அவர் கூற்றுப்படி நேரு தன்னை 1945ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 அல்லது 27ம் தேதியன்று கடிதங்களைத் தட்டெழுத்துச் செய்யக் கூப்பிட்டனுப்பினார் என்றும் அப்போது கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை நான்கு நகல்கள் எடுக்குமாறு கூறினார் என்றும் சொல்லியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் போஸ் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி சைகானிலிருந்து விமானத்தில் மஞ்சூரியாவிற்குச் சென்று விட்டதாகவும் அங்கிருந்து ஒரு ஜீப்பில் மற்ற நால்வர்களுடன் ரஷ்யாவை நோக்கிச் சென்று விட்டதாகவும் இருந்தது என்று கூறியிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில் இருந்ததாக அவர் ஞாபகப்படுத்திக் கூறிய விஷயங்கள் - 'போஸுடன் சென்ற அந்த நால்வரில் ஒருவர் ஜப்பானியரான ஜெனரல் ஷிடை. மூன்று மணி நேரம் கழித்துத் திரும்பிய அந்த ஜீப் போஸ் வந்த விமான ஓட்டியிடம் தகவல் தெரிவித்தவுடன் விமானம் டோக்கியோவுக்குச் சென்று விட்டது '.

அதற்குப்பிறகு ஜெயின், நேரு சொல்லச் சொல்ல ஒரு கடிதத்தைத் தட்டெழுதியிருக்கிறார். அக்கடிதம் பிரிட்டிஷ் பிரதம மந்திரி அட்லிக்கு எழுதியது என்று அவரே கூறியிருக்கிறார். அக்கடிதத்தில் நேரு கீழ்கண்டவாறு எழுதச் சொன்னார் என்று ஜெயின் கோஸ்லா கமிஷனிடம் தெரிவித்திருந்தார் :

'டியர் மிஸ்டர். அட்லி,

உங்கள் போர்க்கைதியான சுபாஷ் சந்திர போஸை ரஷ்ய எல்லைக்குள் நுழைய ஸ்டாலின் அனுமதித்ததாக நம்பத்தகுந்தவர்களிடமிருந்து நான் அறிகிறேன். இது ரஷ்யர்களுடைய நம்பிக்கைத் துரோகம். ரஷ்யா பிரிட்டனுக்கு நேச நாடாக இருப்பதால் இதை அவர்கள் அனுமதித்திருக்கக்கூடாது. தயவு செய்து ஆவன செய்யவும்.

இப்படிக்கு உண்மையான,

ஜவஹர்லால் நேரு '

இதை பாராளுமன்ற உறுப்பினர் சாமர் குஹா அவையில் வெளிப்படுத்தியபோது அவரைப் பலவாறும் ஏசினார்கள். நேருவின் குடும்பத்திற்கு களங்கம் கற்பிக்கச் செய்த சூழ்ச்சி என்று குஹாவைச் சாடினார்கள். ஆனால் பிற்பாடு சேகரித்தத் தகவல்களின் அடிப்படையில் நேருவுக்கு இந்த விஷயத்தில் இருந்த பங்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊர்ஜிதமாகியிருக்கிறது என்று நம்பப்படுகிறது. அவ்வாறு ஊர்ஜிதமான விஷயங்கள் :

பிரிட்டிஷ் உளவுத்துறை நேதாஜியிடமிருந்து நேருவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது என்பதை உறுதி செய்துள்ளது. அதையே ஷ்யாம்லால் ஜெயினும் உறுதி படுத்தியுள்ளார்.

நேதாஜி ரஷ்யாவிற்குத் தப்பிச்செல்ல உடந்தையாக இருந்த கர்னல் தடா என்பவர் 1951ம் ஆண்டு எஸ்.ஏ ஐயரிடம் ஜப்பானியர்கள் நேதாஜி மஞ்சூரியா வழியாக ரஷ்யாவிற்குச் செல்ல ஏற்பாடுகள் செய்வதாக ஒத்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

ஜெயின் கூற்றை கோஸ்லா கமிஷன் மறுக்கவோ அல்லது அவர் சொல்வது பொய் என்று கூறவோ இல்லை.

பிரதமரின் நேர் கண்காணிப்பில் இருக்கும் கோப்புகள் தொலைந்து விட்டதாகவும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அரசு தரப்பில் கூறியது எதையோ மறைப்பதற்கான ஆயத்தமாகவே இருக்கக் கூடும்.

நேரு சிங்கப்பூருக்கு வருகை தந்த போது பிரிட்டிஷ் அட்மிரல் அவரிடம் கூறிய அறிவுரை. இதை நேருவுடன் சென்ற ஜன்மபூமி நாளிதழின் ஆசிரியர் அம்ரித்லால் சேத் சரத் சந்திர போஸிடம் கூறியுள்ளார். அந்த அறிவுரைப்படி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சாகவில்லையென்றும், நேதாஜியைப்பற்றி தொடர்ந்து உயர்வாகப் பேசிக்கொண்டிருந்தால் அவர் திரும்பியவுடன் சுதந்திர இந்தியாவை அவருக்கே விட்டுக் கொடுக்கும்படியாகிவிடும் என்றும் அதனால் INAவை இந்திய ராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. முதல் நாள் இறந்த INA வீரர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நேரு, அட்மிரலிடம் பேசிய பிறகு மறு நாள் INA சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு நேரு நேதாஜியைப்பற்றி எங்குமே பேசவில்லை. அடுத்த பத்து ஆண்டு காலத்தில், நேரு பிரதமர் ஆனபிறகும் கூட நேதாஜியின் பெயரைக் கூட அவர் சொன்னதில்லை.

1950 வரை ஆல் இந்தியா ரேடியோவில் நேதாஜி பற்றிய சிறப்புப் பார்வையோ அல்லது அவரது பிறந்த நாள் பற்றிய அறிவிப்போ ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்ததாக ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

நேரு பிரதமராக பதவியேற்ற பிறகு முந்தைய (பிரிட்டிஷ்) வேவல் அரசுக்கு பிரிட்டிஷ் உளவுத்துறை அனுப்பிய ரகசிய அறிக்கைகளின் நகல்களைப் பெற்றுக்கொண்டார். அவ்வறிக்கைகளில் நேதாஜி ரஷ்யாவிற்குச் சென்று விட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் நேருவோ இந்தியாவின் பிரதமராக ரஷ்ய அரசாங்கத்திடம் அவ்வறிக்கைகளைப் பற்றி அதிகாரப்பூர்வமாகப் பேசவேயில்லை. மேலும் நேதாஜியின் மறைவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வந்திருக்கிறார். பின்பு அவர் அமைத்த ஷா நவாஸ் கான் கமிஷன் கூட 'ராதா பெனோட் பால் ' தலைமையின் கீழ் அதிகாரப்பூர்வமற்ற விசாரணையை நடத்த விடக்கூடாது என்ற நோக்குடன் அமைக்கப்பட்ட ஒரு கண் துடைப்பே என்பது ஊர்ஜிதமாகியதாகக் கூறப்படுகிறது.

நேதாஜியின் மறைவு குறித்து நம்பவே முடியாத அளவுக்கு வெளியாகி இருக்கும் உண்மைகளும் திடுக்கிடவைக்கும் தகவல்களும், பொய்யாகப் பிரசாரப் படுத்தப்பட்ட அவரது மறைவும் இந்திய மக்களைப் பொருத்தவரை மிக மிக முக்கியமான விஷயங்கள். நேதாஜியின் மறைவு பற்றிய முகர்ஜி கமிஷனின் உண்மைக் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிடுவது இன்றியமையாதது. அதைப் பற்றி அறிந்து கொள்வது ஒவ்வொரு இந்தியனின் தார்மீக உரிமையும் ஆகும். இது நடக்குமா ? பொறுத்திருந்துப் பார்ப்போம். கெடுவை நீட்டிக்கவில்லையென்றால் முகர்ஜி கமிஷனின் காலக்கெடு மே மாதத்துடன் முடிவடைகிறது.

No comments:

Post a Comment