தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பஞ்ச பூத
தலங்களில் ஆகாய தலமாக அழைக்கப்படும் தேவதானம் பெரியகோயில் வைகாசி விசாகத்
தேரோட்டத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் தவம் பெற்ற நாயகி சமேத நச்சாடை
தவிர்த்தருளிய சுவாமி கோயில் திருவிழா கடந்த மே 15-ஆம் தேதி வேதபாராயண
முறைப்படி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி அம்மனுக்குச்
சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை வழிபாடுகள் நடத்தி அலங்கார வாகனத்தில் வீதி
உலா நடைபெற்றது.
கடந்த மே 21-ஆம் தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண விழா
நடைபெற்றது. வியாழக்கிழமை முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
காலையில் அலங்கார பெரியதேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். மற்றொரு
தேரில் அம்மன் எழுந்தருளி பூஜை நடைபெற்றது. கோயில் பரம்பரை
அறங்காவலர் ஜமீன்தார் துரைராஜசேகர், கோயில் நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம்,
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் ஆர்.எம். குருசாமி தேர்வடம்
பிடித்து இழுக்க தேரோட்டத் திருவிழா துவங்கியது. நான்கு ரதவீதிகளிலும்
வலம் வந்த தேரை தேவதானம், சேத்தூர், முகவூர் மற்றும் சுற்றுப் பகுதியைச்
சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து, பல்வேறு நேர்ச்சைகளை
செலுத்தினர். வெள்ளிக்கிழமை தீர்த்தவாரியுடன் வைகாசி விசாகத் திருவிழா
நிறைவடையும்.
No comments:
Post a Comment